காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label மற்றவர்கள். Show all posts
Showing posts with label மற்றவர்கள். Show all posts

Monday, April 13, 2009

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான் - திருமா

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Friday, March 27, 2009

ராமதாஸ் காமெடி


ராமதாஸ் நேத்து ஒரு ட்ராமா நடத்தினது எல்லாருக்குமே தெரியும். அதெப்டிங்க மருத்துவரே... நீங்க பொதுக் குழுவை கூட்டுவிங்க. அதுல அதிமுகவா, திமுகாவா என்று கேட்டு ஒரு அட்டையை எல்லார்கிட்டயும் குடுப்பிங்க. அவங்க எந்தக் கூட்டணின்னு சொல்வாங்க. அப்பால அந்தக் கூட்டணியில நீங்க சேருவிங்க. உங்களுக்கே இதெல்லாம் சிரிப்பு வரலை? :))

சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )

போறதுன்னா வழக்கம் போல வேட்டியை இறக்கிவிட்டு துண்டை இடுப்புல கட்டிகிட்டு தலையைக் குனிஞ்சி கை கூப்பிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே. அதான் இரண்டு பக்கமும் ஆள்விட்டுப் பேசி எங்க வெயிட்டா கெடைக்கிதோ அங்க சேருவதுன்னு முடிவு பண்ணியாச்சி இல்ல.

அதென்னா மருத்துவரே பூவாத் தலையா போடற மாதிரி ஒரு வாக்கெடுப்பு? . உங்களுக்குன்னு கொள்கை தான் ஒன்னும் இல்லை. இப்போதைய சூழல்ல யாரோட செயல்பாடு நல்லா இருக்குன்னு பார்த்து போறதா சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். அதை விட்டு பள்ளிக் கூட பசங்களை மாதிரி சரியான விடையை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிங்க. நல்லா இருங்கய்யா..

அன்புச்சகோதரி கிட்ட ஏற்கனவே பேசி ஒப்பந்தம் எல்லாம் போட்டாச்சி இல்ல. அதை நேரடியாக அமல்படுத்த வேண்டியது தானே. எதுக்கு பொதுக் குழு ட்ராமா?. ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? அவங்க தான் ஒரு மாவட்ட செயலாளர் அல்லது மந்திரிக் கூட உங்க கிட்ட வந்து பேசலையே.

ஆனா ஒன்னு மருத்துவரே.. இந்த தேர்தல் முடியறதுக்குள்ள நீங்க அனுபவிக்கப் போறதை எல்லாம் நினைச்சா உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.. :(

அதிக அளவில் பல்டி அடிச்சது நீங்க தான்னு தினமலர்ல நியூஸ் போட்டிருக்காங்க. அவிங்க கெடக்கறாய்ங்க. குடும்பத்துல இருந்து யார்னா அரசியலுக்கு வந்தா முச்சந்தியில வச்சி சவுக்கால அடிக்க சொன்ன கொள்கை வீரர் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க.

சரி சரி.. போனோமா.. 6 சீட்டு வாங்கினோமா 2 எடம் ஜெயிச்சோமான்னு சட்டு புட்டுன்னு கிளம்பி வாங்க. அங்கயே ரொம்ப நாள் இருந்துடாதிங்க. அன்புமணிக்கு மந்திரிப் பதவி தொடரனும்ல.

தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன்.

Thursday, March 26, 2009

திருமாவளவன் பேட்டி



'' திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடரும்'' என்று முதல்வர் அறிவித்த பிறகும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உங்களுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே ?


'' நான் தனிப்பட்ட முறையில் எந்த காங்கிரஸ் தலைவரையும் விமர்சிக்கவில்லையே ? ''பதிபக்தி இல்லாதவர்'' என்று சோனியாவின் நடத்தையை விமர்சித்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க தங்கபாலு, ஞான சேகரன் போன்றவர்கள் துடிதுடிக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் இதற்கு முன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், அதில் பல முரண்பாடுகளையும் கண்டுள்ளது. அந்தக் கட்சிகளை விட நான் எதுவும் பெரிதாகப் பேசி விடவில்லையே ?''


'' கருணாநிதி, முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் நாம் ராஜீவ் காந்தியை இழந்தோம். இப்போது விடுதலை சிறுத்தைகளை ஆதரிப்பது சோனியாவுக்கு ஆபத்தாக முடியும்.'' என்று ஞான சேகரன் கூறியிருப்பது பற்றி ?


'' இதற்கு கலைஞர்தான் பதில் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவை வெளியேற்ற வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு அல்ல. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அப்படித்தான் நான் கருதுகிறேன்.''


'' அம்பேத்கரின் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் லட்சியம் '' என்று முன்பு கூறியிருந்தீர்கள். அந்த நிலைப்பாட்டில் இப்போது ஏதாவது மாற்றம் உள்ளதா ?


'' ஒரு தேர்தலுக்காக அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது. அம்பேத்கரின் பார்வையில் அன்றைய காங்கிரஸ் கட்சி எப்படி இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தேன். அதே நேரத்தில் இதைத் தேர்தலோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.''


வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்னைதான் முக்கியப் பிரச்னை. இதில் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே காட்டமாக விமர்சித்த நீங்கள்,மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்வீர்கள் ?


'' ஈழத்தமிழர்களுக்காக திமுக அரசு எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. அதில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ ராஜபக்ஷேவின் குரலாகவே ஈழப்பிரச்னையில் எதிரொலித்தார். ''புலிகள் ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும் '' என்றும் '' போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் '' என்றும் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது என்று தெரிந்ததும் ஈழப்பிரச்னைக்காக ஜெயலலிதா தேவையில்லாமல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது அப்பட்டமான நாடகம் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஈழப்பிரச்னை தொடர்பாக மாநில அரசு எடுத்த முயற்சிகளைச் சொல்லி நான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வேன்.''


மத்திய அரசின் சாதனை எதையாவது சொல்லித்தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும் ?


'' இங்கே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இழந்து விட்டன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை மாநிலக் கட்சிகள் தான் முடிவு செய்கின்றன. ஆகவே, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் போதும், மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லத் தேவையில்லை.


திமுக கூட்டணியில் நீங்கள் நீடிக்க விரும்புகிறீர்கள். காங்கிரஸோ உங்களை வெளியேற்ற கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து இதற்காக சமரச முயற்சி மேற்கொள்வீர்களா ?


'' எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவர்களை நான் சந்திக்க மாட்டேன். இங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும் தமிழர்கள்தான். அவர்கள் ஒன்றும் மார்வாடிகளோ, குஜராத்திகளோ கிடையாது.''


”கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமகவுக்கு சீட் பங்கீட்டில் உங்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ததால், ''எச்சில் இலைச் சோறு வேண்டாம்'' என்று ரோஷத்துடன் திமுக கூட்டணியில் இருந்து விலகினீர்கள். இப்போது நீங்கள் நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கும் நிலையில் உங்கள் ரோஷம் எங்கே போனது ?


'' தமிழகத்தில் நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல''


உங்களது இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தீர்வு காண முயல்வீர்களா ?


'' எங்கள் கொள்கையோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துப் போகிறது'' என்று முதல்வர் அறிவித்த பிறகுதான் நான் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கூட்டணியில் நீடிப்பதாக அவரே அறிவித்து விட்டார். எனவே, என்னை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கேள்விக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்''.


உங்கள் பிரச்னை இப்படியே நீடித்தால் நீங்கள் அணி மாற வாய்ப்பு உண்டா ?


'' நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பற்றிகூட பேசவில்லை.''


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

படங்கள் : இணையத்தில் இருந்து