இதோ வாபஸ்... அதோ வாபஸ்' என்று வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்த இடதுசாரிகள் ஒருவழியாக அதைச் செய்தும் முடித்துவிட்டனர். அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் யதார்த்தம். காரணம், சமாஜ்வாதியுடன் உறவு, உதிரிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, ஜார்ஜ் புஷ்ஷுடன் சந்திப்பு என்று காங்கிரஸ் அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டிருந்தால், அவர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்? ஆகவே, வாபஸ் கடிதம் கொடுத்து தன்மானத்தைக் காப்பாற்றிவிட்ட சந்தோஷத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் இருக்கட்டும். நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை அதிரடியாக விலக்கிக்கொள்ளும் அளவுக்கு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அப்படி என்ன பொல்லாத சங்கதிகள் இருக்கின்றன?
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் ஹைடு, IAEA போன்ற பல பதங்களில் எது சட்டம், எது ஒப்பந்தம், எது அமைப்பு என்றே தெரியவில்லை. ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக்கொண்டே வருவோம்.
ஒப்பந்தம் -
அமெரிக்கா உலக நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கிக்கொண்ட சட்டத்தின் 123 வது பிரிவின்படி இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஆகவே, 123 ஒப்பந்தம் என்கிறார்கள்.
இந்தியாவிடம் இருக்கும் பல அணு உலைகள் வெளிநாடுகளின் உதவியுடன் கட்டப்பட்டும் இயங்கியும் வருகின்றன. உதாரணமாக அப்சராஅணு உலை. இதுதான் ஆசியாவின் முதல் அணு உலை. இதை இந்தியாவே உருவாக்கிக்கொண்டது. ஆனால், அதற்கான எரிபொருள் இங்கிலாந்திடம் இருந்து பெறப்பட்டது. அடுத்து, கனடா நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் மேலும் ஓர் அணுஉலை கட்டப்பட்டது. அதற்கான எரிபொருளை இந்தியாவே தயாரித்துக் கொண்டது.
பிறகு, தாராப்பூர் அணுமின் நிலையம் அமெரிக்காவின் உதவியுடன் கட்டப்பட்டது. இதற்கான எரிபொருளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்காக 1963-ல் 123 பிரிவின்படி ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் முப்பது ஆண்டுகளுக்கு தங்குதடையின்றி எரிபொருள் வழங்கவேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். கொடுக்கலும் வாங்கலும் சுமுகமாகவே சென்று கொண்டிருந்தன.
1974-ல் திடுதிப்பென அணுகுண்டுச் சோதனை நடத்தியது இந்தியா. உபயம்: இந்திராகாந்தி. `எங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக அணுகுண்டுச் சோதனை நடத்தினோம்' என்றார் இந்திரா. இது அமெரிக்காவை ஆத்திரப்படுத்த, வெடுக்கென்று ஒப்பந்தத்தை ரத்துசெய்து கொண்டதோடு, `இனிமேல் எரிபொருள் தரமுடியாது' என்று கைவிரித்துவிட்டது.
பிறகு பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் உதவியோடு தாராப்பூர் அணுமின் நிலையம் இயங்கியது தனிக்கதை. இருந்தாலும் அமெரிக்கா அணு உறவை முறித்துக்கொண்ட நிமிடம் தொடங்கி இன்றுவரை எந்தவித அணு உறவும் இந்தியா - அமெரிக்கா இடையே இல்லை.
சரி.. இப்போது எதற்காக இந்த ஒப்பந்தம்?
இந்தியாவுக்கு இப்போதைய அதிமுக்கியத் தேவைகளுள் ஒன்று அணுமின்சாரம். நிலக்கரி மற்றும் நீர் மூலம் கிடைக்கும் மின்சாரம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்யாது.
அணு மின்சாரம் தயாரிக்க யுரேனியம் என்ற எரிபொருள் தேவை. அதற்காகவே அமெரிக்காவுடன் மீண்டும் கரம்கோக்க முடிவு செய்தது இந்திய அரசு.
யுரேனியம் தரமுடியாது என்று முறுக்கிக்கொண்டு போனபோது, இருந்த இடத்தைக் காட்டிலும் மிக வலுவான நிலையை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா எட்டிப் பிடித்துவிட்டதால் முறிந்துபோன அணு உறவைப் புதுப்பித்துக்கொள்ள அமெரிக்காவும் தயாராக இருந்தது. எல்லாம் கூடிவரவே ஆகஸ்டு 3, 2007 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள் :
ற இந்தியா அணுகுண்டு தயாரிப்பதில் அமெரிக்கா தலையிடாது.
ற அமெரிக்கா தவிர, வேறு நாடுகளில் இருந்து வாங்கப்படும் எரிபொருள் கொண்டு அணுகுண்டு தயாரிப்பதில் அமெரிக்கா தலையிடாது.
ற அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கும் அணுசக்திப் பொருட்களைத் திரும்ப வாங்கிக் கொள்ள அமெரிக்காவிற்கு உரிமை உண்டு. அதற்கான தகுந்த இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும்.
ற அணு மின்சாரம் தயாரிக்கும் எல்லா உலைகளையும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நேரடிக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
ற ஒப்பந்தம் 40 ஆண்டுகாலம் செயல்பாட்டில் இருக்கும். இடையே ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்பினால் அதற்கு ஓர் ஆண்டு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
ராணுவப் பயன்பாட்டுக்காக என்று அல்லாமல் மின்சாரத் தயாரிப்புக்காக என்ற அமைதி நோக்கத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் இது என்பதால், அமெரிக்காவிடமிருந்து வாங்கும் யுரேனியத்தை ராணுவத்திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும். அதை யார் செய்வது? இந்த இடத்தில்தான் IAEA என்ற சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி என்ற ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஆட்டத்துக்குள் வருகிறது.
இந்த அமைப்பின் கண்காணிப்பில் நம்மிடம் மொத்தமுள்ள 22 உலைகளில் 14உலைகளை உட்படுத்த இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த உலைகளில் வைத்தே அணுமின்சாரம் தயாரிக்க இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பிரச்னை இந்த இடத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
நாம் காசு கொடுக்கிறோம். அமெரிக்கா யுரேனியம் தருகிறது. வியாபாரம் இத்தோடு முடிய வேண்டும். ஆனால், நமக்குச் சொந்தமான அணு உலையில் நாம் என்ன செய்கிறோம் என்பதை அமெரிக்காவோ அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்போ எதற்காக கண்காணிக்க வேண்டும்? ஆக, இது ஓர் அடிமை சாசனம்தானே என்பது இடதுசாரிகளின் வாதம்.
ஆனால், நம்மிடம் யுரேனியம் இல்லை என்பதால்தானே அமெரிக்காவிடம் கேட்கிறோம். அணுமின்சாரம் தயாரிக்க என்று சொல்லிப் பெறுகின்ற யுரேனியத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதிக்கும்போது அதை ஏற்றுக்கொள்வதுதான் முறை. அதேசமயம், அவர்களுடைய கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வராத வகையில் எட்டு உலைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றில் நாம் என்ன செய்கிறோம் என்பதை யாரும் கேட்க முடியாது, பார்க்க முடியாது, கண்காணிக்க முடியாது என்கிறது மத்திய அரசு.
அடுத்ததாக,அமெரிக்க நாடாளுமன்றம் ஹைடு சட்டத்தைக் கொண்டுவந்து இந்தியாவின் கழுத்தை நெரிக்கும் காரியத்தைத் தொடங்கிவிட்டது என்கிறார்கள் இடதுசாரிகள். அது என்ன ஹைடு சட்டம்?
இந்தியா, அமெரிக்கா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து 2006 டிசம்பரில் அமெரிக்க நாடாளுமன்றம், ஹைடு என்ற மன்ற உறுப்பினர் ஒருவர் பெயரால் அழைக்கப்படும் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதில் இந்தியாவுக்குப் பல கெடுபிடிகள் விதிக்கப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளன எதிர்க்கட்சிகள்.
ற அணு உலைக்கான எரிபொருளை நாம் இதர நாடுகளிலிருந்து தங்குதடையின்றிப் பெறுவதற்கான உத்தரவாதம் இல்லை.
ற வருங்காலத்தில் இந்தியா அணுஆயுதப் பரிசோதனை ஏதாவது மேற்கொண்டாலோ அல்லது வேறு காரணத்தின் அடிப்படையிலோ இந்த ஒப்பந்தம் முறிந்து போகக்கூடும்.அணு உலை எரிபொருள் இறக்குமதியும் தடைபட்டுப்போகும்.
ற அமெரிக்காவிலிருந்து அதுவரை நாம் பெற்றிருந்த எரிபொருள் மற்றும் ஏனைய உபகரணங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கான உரிமை அமெரிக்காவுக்கு உண்டு.
ீ இயற்கையில் கிடைக்கும் யுரேனியப் பொருளை செறிவூட்டுவதற்கான மற்றும் கனநீர் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை நாம் அமெரிக்காவிலிருந்து பெறும் வாய்ப்புக் கிடையாது.
ீ அணு உலையிலிட்டு எடுத்த யுரேனிய எரிபொருளிலிருந்து புளுட்டோனியப் பொருளை மீட்பதற்கான ஆலைத் தொழில்நுட்பத்தையும் பெறமுடியாது. மேலும், இத்தகைய ஆலையை வெளி உதவியின்றி நாமே உருவாக்கினாலும், அவற்றைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட யுரேனிய எரிபொருளிலிருந்து புளுட்டோனியப் பொருளைப் பிரித்தெடுக்க அனுமதி தரப்படமாட்டாது.
ீ ஈரான் நாட்டுடன் உறவு அல்லது பெட்ரோலியம் மற்றும் எரிவாயு இவற்றை அந்நாட்டிலிருந்து பெறுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டால் ஒத்துழைப்பு தடைபட்டுப்போகும் வாய்ப்பு உண்டாகும்.
ீ 123 ஒப்பந்தம் ரத்தானாலும் உலைகளை சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு உட்படுத்தியது மட்டும் ரத்தாகாது.
ஆனால், இவை எல்லாவற்றுக்குமே மத்திய அரசு பதிலைத் தயாராக வைத்துள்ளது.
123 ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட பிறகு, மற்ற நாடுகளிடம் இருந்து யுரேனியம் வாங்குவதில் எந்தத் தடையும் ஒப்பந்தத்தில் இல்லை. அதேபோல மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கும் யுரேனியத்தை IAEAவின் கட்டுப்பாட்டுக்குள் வராத மற்ற எட்டு உலைகளிலோ அல்லது புதிதாகக் கட்ட இருக்கும் அணு உலைகளிலோ பயன்படுத்துவதற்கு எந்தத் தடையுமில்லை. அந்த யுரேனியத்தைக் கொண்டு நம்முடைய பாதுகாப்பு காரணங்களுக்காக அணுகுண்டு தயாரிப்பதற்கு IAEA தடைவிதிக்கமுடியாது என்கிறது மத்திய அரசு.
எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, ஒருவேளை அமெரிக்கா ஒப்பந்த விவகாரத்தில் சரியாக நடந்துகொள்ளாதபட்சத்தில், இந்தியா அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. காரணம், அதற்கான எந்த உரிமையும் இந்தியாவுக்கு இல்லை என்பது. ஆனால் இதை முற்றிலுமாக மறுக்கிறது மத்திய அரசு.
இந்தியாவும் சரி, அமெரிக்காவும் சரி, எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யலாம். அதற்கான காரணத்தை நோட்டீஸ் மூலமாகக் கொடுத்துவிட வேண்டும். நோட்டீஸ் தரப்பட்ட ஒருவருட காலத்தில் ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும். நோட்டீஸ் கொடுத்தபிறகு, இருதரப்பும் சமாதானம் செய்துகொண்டால் நோட்டீஸை எழுத்துமூலம் வாபஸ் வாங்கிக் கொண்டால் ஒப்பந்தம் நீடிக்கும். இந்த விஷயத்தில் இந்தியா,அமெரிக்கா இரண்டு தரப்புக்குமே சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது என்கிறது மத்திய அரசு.
ஒருவேளை, இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் உடனடியாக அமெரிக்கா, தான் கொடுத்த எரிபொருளைத் திரும்பக் கேட்க முடியும். அதற்காக அமெரிக்கா கேட்டவுடன் இந்தியா திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. தனது அணு உலைகள் நின்றுவிடாமல் இருக்க தாற்காலிகமாக என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்துகொண்டு, பிறகு திருப்பிக்கொடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது.அத்துடன், எரிபொருளைத் திரும்பக் கொடுத்தாலும் அதற்கென இந்தியா முன்னர் கொடுத்திருந்த பணத்தைத் திரும்பக் கேட்கலாம்.
123 ஒப்பந்தம் மற்றும் ஹைடு சட்டம் இரண்டிலுமே எல்லா விஷயங்களும் மிகத்தெளிவாக இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும்மேலோட்டமாகப் பார்த்துவிட்டு இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன என்கிறது காங்கிரஸ் கட்சி.
இத்தனை சிக்கல்களும் சர்ச்சைகளும் கொண்ட அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் இல்லாமலேயே நாம் அணுமின்சாரம் தயாரிக்க முடியாதா? என்ற கேள்வியும் எழுகிறது. இதை சாத்தியமாக்க வேண்டும் என்றால் துணிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
முதலில், இந்தியா இனிமேல் அணுகுண்டே தயாரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து, பகிரங்கமாக அறிவிப்புச் செய்து, தன்னிடம் உள்ள அணுகுண்டுகளை எல்லாம் அழித்து, IAEAவுடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். இதற்குமுன்னர் ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் இம்மாதிரியான நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அப்படிச் செய்தால் நியூக்ளியர் சப்ளைஸ் குரூப் என்ற அணுசக்தி விநியோகக் குழு (NSG) வில் இருக்கும் நாடுகளுடன் நேரடியாக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம். அவர்களிடம் இருந்து வாங்கும் யுரேனியத்தைக் கொண்டு அணுமின்சாரத்தைத் தயாரிக்கலாம்.
ஆனால், இந்த இடத்தில் நம்முடைய அண்டை நாடுகள் என்ற பெயரில் இருக்கும் எதிரிகளான சீனாவும் பாகிஸ்தானும் நம்மைக் குழப்புகின்றன. அவர்களிடம் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அடிப்படையில் அணுகுண்டை வைத்திருக்க விரும்புகிறோம். இதுதான் இடிக்கிறது.
அணு மின்சாரமும் வேண்டும், அணுகுண்டும் வேண்டும் என்ற சூழலில் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்துகொள்வது அவசியம். ஒன்று, கூழைக் குடிக்கவேண்டும், மீசையை இழந்து. அல்லது மீசையைத் தக்கவைக்க வேண்டும், கூழைப் புறந்தள்ளி. ஆனால், பக்குவமாக மீசையை ஒதுக்கிவிட்டு, கூழைக்குடித்துவிடமுடியும் என்று நம்புகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அது அமெரிக்காவிடம் முடியாது என்கின்றனர் இடதுசாரிகள். இதுதான் பிரச்னை!
- நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் ( 17.07.08 கவர் ஸ்டோரி )